சரித்திரம்
சங்ககாலம் முதல் தமிழகத்திற்கும் ஆந்திரம் மற்றும் கர்னாடகத்திற்கும் இடையில் வணிகப் போக்குவரத்து இருந்து வந்துள்ளது. வணிகத்திற்காகத் தெலுங்கு வணிகர்கள் சங்காலத்தி லிருந்தே தமிழகத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர் என்பதைக் கல்வெட்டு அகழ்வுச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் வணிகர்கள் வடுகதேயம் சென்று வணிகம் செய்ததைக் கனேறி, நெல்லூர் முதலான இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். விஜயநகரமன்னர்கள் 14 ஆம் நூற்றாண்டியல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த போது படைகட்கு உதவிசெய்யப் பல்வேறு தொழில் பிரிவினரையும் உடன் அழைத்து வந்தனர். அவர்களுடன் வணிகத்திற்காக வந்த வளஞ்சியர்களின் ஒரு பிரிவினர். 24 மனைத்தெலுங்குச்செட்டியார்கள் ஆவர். படை முகாம்களில் பெரிய வணிகமையங்கள் இருந்தன. வணிகத் தொழில் நடைபெற்றுள்ளது. வணிகர்களுக்குப் படை வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப் பட்டிருந்தது. வெற்றிக்குப்பிறகு படைகள் மன்னேறிச் செல்லுகையில் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் கைப்பற்றிய பகுதிகளை ஒப்படைத்துச் செல்லுவது வழக்கமாக இருந்தது. அதன் படி வணிக வீரர்களாகத் திகழ்ந்த இவர்கட்குச் சில பகுதிகளை ஆளும் வாய்ப்பு கிடைத்ததால் "தேசாதிபதிகள்" என அழைக்கப் பெற்றனர். இடங்கை, வலங்கை என்ற இருபிரிவுகளில் இருந்ததும் ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதிகள் இருந்ததும் வரலாற்று உண்மை. இதில் 24 மனைத்தெலுங்குச் செட்டியார்களின் இடங்கைப் பிரிவினைச் சார்ந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. தட்சிணபதம், காஞ்சி பருகச்சப் பெருவழி ஆகிய நெடுஞ்சாலைகள் வழியாக விஜயநகரப் படைகள் தமிழகத்திற்கு வந்தன. இந்தப் பெருவழிகளில் அமைந்துள்ள முக்கிய நகரமான கரூரைச் சுற்றி அமைந்துள்ள இவ்வினத்தவரின் குலதெய்வக் கதைகள் இவர்கள் வந்த இந்த வழித் தடத்தை உறுதிப் படுத்துகின்றன.
புராணம்
இவ்வினத்தவர் பற்றிய புராணக்கதை இவ்வினத்தின் தோற்றம் பற்றியும். உரிமைப் பெண் மணஉறவு பற்றியும் குறிப்பிடுகின்றது. தெலுங்குச்செட்டி, ஜனப்பச் செட்டி, சாதுச் செட்டி என்று பல்வேறு பெயர்கள் 24 மனைத்தெலுங்குச் செட்டியார் இனத்திற்கு உண்டு. `மனை` என்பது பழந்திராவிடச் சொல்லாகும். வீடு, பல்கிப்பெருகுவது` என்ற பல பொருட்கள் இதற்கு உண்டு. இந்த அடிப்படையில் `மனை` என்ற சொல் இங்கு குலத்தைக் குறிப்பதாக அமைகின்றது. `24` எனும் எண், புனித எண்ணாகப் பழங்காலத்திலிருந்து கருதப்பட்டு வருகின்றது 24 குலங்களை உடைய, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வணிகர்கள் என்பதே 24 மனைத் தெலுங்கு செட்டியார்கள் என்பதின் பொருளாகும்.
குடும்பம்
குடும்பம் என்பது அடிப்படை அலகு. இது அனைத்துச் சமுதாயங்களிலும் காணப்படுகின்ற நிறுவனமாகும். குடும்பமானது பாலியல், இனப்பெருக்கம், பொருளாதாரம், கல்வி, ஆகிய நான்கு முதன்மையான பணிகளைச் செய்கின்றது.குடும்பமானது இரு நிலைகளில் உள்ளது. மணமக்கள் மணவாழ்வு கொள்ளும் நிலையில் தொடங்கும் இதற்கு மணவழிக்குடும்பம் என்றும் அவர்களின் சந்ததியினர் பல்கிப் பெருகிய நிலையில் உள்ளது. வளர்குடும்பம் எனவும் அழைக்கப்படுகிறது. 24 மனைத்தெலுங்குச் செட்டியார்களின் குடும்ப அமைப்பு வளர்குடும்பமாக விரிந்து பரந்துள்ளது. குடும்பங்களின் துணைகொண்டு வளரும் உறவுப் பிணைப்பானது அந்தந்த சமுதாய முறைக்கு எற்ப அமைகின்றன.
குலம்
குலம் எனும் சொல்லுக்கு ஒரு குலையில் இருந்து கிளைத்து வந்தவர்கள் என்பது பொருள். குலம் எனும் சொல்லாட்சி பல இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவ்வினத்தில் 24 குலங்கள் உண்டு. பல்லடம் செப்பேடு 24 குலங்களின் பெயர்களையும் கூறும் சான்றாதாரமாகத் திகழ்கின்றது.24 மனைத்தெலுங்குச்செட்டியார்கள் தந்தை வழிமரபு எனும் ஒரு வழிமரபு சார்ந்த ஒரு மூதாதையர் வழிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வினத்தில் சொத்துரிமை செட்டுமை, பூசாரி, பெரியதனம், கோயில்தலைவர், போன்ற பதவிகள் மரபுவழியாக ஆண் வாரிசுகட்கே உண்டு. மணவழிக்குடும்பத்தில் தொடங்கி வளர்குடும்பமாக விரிவு பெற்று, தந்தை வழி மரபில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் எனும் நேர்கோட்டில், மரபுரிமையில் பெருகி நிற்பதே குலமாகும். ஒரு குலத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அவர்கள் ஒரு மூதாதையர் வழி வந்தவர்கள் என்பதும் பொருளாகிறது. திருமணமானவர்களைத் தலைக்கட்டு என்று அழைக்கின்றனர். `தலைக்கட்டுவரி` செலுத்துவது குலமக்களின் தலையாய கடமை எனக்கருதப் படுகிறது. தலைக்கட்டுவரி மூலம் வரும் வருவாயி லிருந்துதான் குலதெய்வக்கோயிலுக்கான ஓராண்டுச் செலவினங்கள் சந்திக்கப்படுகின்றன. `தலைக்கட்டுவரி` செலுத்துவது பற்றிய செய்தி பல்லடம் செப்பேடு மூலம் அறிய முடிகின்றது.
மண உறவு
இவ்வினத்தவரின் மண உறவுகள் `புறமணம் சார்ந்தவை. 24 குலங்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவில் 16 குலங்கள் அணிவகுக்கின்றன. மறுபிரிவில் 8 குலங்கள் அணிவகுக்கின்றன. ஒரே பிரிவுக்குள் திருமணங்கள் நிகழ்வதில்லை. இரு பிரிவுக்கும் இடையேதான் மண உறவுகள் நடைபெறுகின்றன. இநத் மண நெறியிலிருந்து பெரும்பாலும் பிறழ்ச்சி நிகழ்வதில்லை. மண உறவுகள் குல அடிப்படையில் நிகழ்கின்றன. சில குலங்களுடன் மண உறவுகொள்ளுவது சில குலத்தினருக்கு ராசி என்றும் சில குலத்தினருக்கு ராசியில்லை என்றும் பெரிதும் நம்புகின்றனர். குலராசி பற்றிய நம்பிக்கை இவ்வின மக்களிடையே நிறைந்திருக்கிறது. மண உறவுகளை நிர்ணயிக்கும் கருவியாகக் `குலம்` செயல்படுகிறது.
குலதெய்வம்
வழிபடு தெய்வங்களுள் முதன்மையானது குலதெய்வமே எனும் எண்ணம் 24 மனைத்தெலுங்குச் செட்டியார்கள் இன மக்கள் மத்தியில் ஆழமாக வேரோடியுள்ளது. ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் உண்டு. ஒரே தெய்வம் ஒரு குலத்தவருக்குக் குலதெய்வமாக இருப்பதுண்டு. ஒரு (பெயருள்ள) குலத்திற்குப் பல்வேறு இடங்களில் குலதெய்வம் இருப்பதுண்டு. ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் ஒரு வரலாற்றுக்கதை உண்டு. இருப்பினும் சில குலதெய்வக்கதைகள் மட்டும் உதாரணக் கதைகளாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் குல தெய்வக் கதைகள் குலதெய்வ வழிபாடு பற்றிக் கூறுவதோடு, கற்பு உயிரினும் மேலனது கணவனைப் பிரிந்து வாழாமை, வளர்ப்புப் பிள்ளையை ஈன்றபிள்ளைக்கும் மேலாகப் பேணுதல், முதுமையை எள்ளல் கூடாது. பஞ்சாயத்தார் தீர்ப்புக்குக் கட்டுப்படுதல் முதலிய அறக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நீதிக் கதைகளாகவும் திகழ்கின்றன.குலதெய்வத்தின் வரலாறு, வழிபாடு, நம்பிக்கைகள், புலம்பெயர்தல், தொழில் ஆகியனபற்றி இக் கதைகள் புலப்படுத்துகின்றன. `பங்காளிகள்` என்ற சொல் ஒரு குலதெய்வத்தை வணங்குபவர்கட்கு மட்டுமே பயன்படுகின்றது.
குல கோவில்கள்
இவ்வின மக்களுடைய குலதெய்வமானவர்கட்கு நடுகல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அற்புத நிகழ்வால் உண்டான குலதெய்வம் பேழையில் வைத்து வழிபடப்பட்டது. நடுகல் வழிபாடும், பேழை வழிபாடும் காலப்போக்கில் சிலை வழிபாடாக மாற்றம் பெற்றுக் குலதெய்வக் கோயில்களாக வடிவம் பெற்றன. குலதெய்வக் கோயில்களில் `மூலக்கோயில்கள்` என்றும் அங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்று கட்டப்படும் கோயில்கள் பிடிமண் கோயில்கள்` என்றும் இருவகை உண்டு. பிடிமண் எடுத்துவந்து கட்டும்போது மூலக்கோயில்களின் அருளாற்றல் பிடிமண் கோயிலுக்குக் கிடைக்கிறது. மூலக்கோயில் சிதை வுற்றால் பிடிமண் கோயிலுக்கு அருளாற்றல் இராது எனக் கருதப்படுகின்றது. இவ்வினத்தவரின் குலதெய்வக் கோயில்கள் கிராமத்திலுள்ள அனைத்துச் சமூகத்தினரும் வழிபடும் கிராமக்கோயில்களாக விரிவாக்கம் பெறுகின்றன. குலதெய்வத் திருவிழாவின் போது, உள்ளூர் மக்கட்கு அன்னதானம் வழங்குவது இவ்வினத்தவரின் மிகப்பழமையான மரபாகும். குலதெய்வக் கோயில்களில் உள்ள மண்டபங்கள் குலதெய்வ விழாக்கள் இல்லாத நாட்களில், திருமணம், காதணி சடங்கு போன்ற பிற கிராம மக்களின் சமூக நிகழ்வு கட்குப் பயன்படும் சமுதாயக் கூடமாக விளங்குகிறது. இவ்வின மக்கட்கும். பிற சமூகத்தினருக்குமிடையே சமூக நல்லுறவை இது வளர்க்கிறது.
குல திருவிழாக்கள்
தமிழர் திருநாளான பொங்கல் நாளில் குடும்பத்தலைவர், குடும்பத்தலைவி, குலதெய்வம் ஆகிய முவருக்கும் மூன்று பொங்கல்கள் வைப்பது இவ்வினத்தின் தனிச்சிறப்பாகும். குலதெய்வப்பொங்கல் புற்றுக்கண் வழிபாடு இவ்வினத்தின் தனித்தன்மையாகும். திருமண நிகழ்வுக்குப் பிறகு மணப்பெண் வைக்கும் முதற்பொங்கல் குலதெய்வக் கோயிலில் தான் எனும் மரபு வழுவின்றிப் பின்பற்றப்படுகிறது. குலதெய்வத்தின் சீற்றத்தைத் தணிப்பதற்காகவும், நேர்த்திக்கடனுக்காகவும் தெய்வத்தைத் திருப்திப்படுத்து வதற்காகவும், குலதெய்வக்கோயில்களில் உள்ள காவல் தெய்வத்திற்குப் பலியிடப்படுகின்றன. அங்காளம்மன் வழிபாட்டில் பண்டைய கொற்றவை வழிபாட்டின் கூறுகள் இடம் பெறுகின்றன. இவ்வாறு இவ்விழாவில் கலந்து கொள்ளுவதால் நிகழும் உறவினர் சந்திப்பு, கூட்டு உறவில் நெகிழ்ச்சியின்மையையும் கூடி மகிழும் குழு மனப்பான்மையை உருவாக்குகின்றது. குலதெய்வ விழாக்கள் மணப்பெண் மணமகளைத்தேர்வு செய்யும் களங்களாக அமைகின்றன. குலதெய்வக் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா, புரட்டாசிச்சனிக்கிழமை, கார்த்திகை விளக்கீட்டு விழா, மகா சிவராத்திரி விழா முதலியவை குலமக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் விழாக்களாகும்.
நீத்தார் வழிபாடு
இவ்வினத்தில் ஒருவர் இறந்து விட்டால் உயிர் நீத்தவுடன் அவருக்குச் செய்யும் பூசை, இறந்தவரது குலத்தைச் சேர்ந்த பங்காளியால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிற பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது. இறப்புக் காரணமாக ஏற்படும் தீட்டினால் 6 மாதம் வரை குலதெய்வக் கோயிலுக்கு அக்குடும்பத்தினர் செல்லுவதில்லை. இறப்பு வீட்டில் நடக்கும் கருமாதிச் சடங்கின்போது இறந்தவரது வாரிசுகட்கு, உரிமைக்கட்டுச் சீருக்காக, அவரது மாமன், மச்சான் உறவுக்காரர்களால் வழங்கப்படும். வேட்டி துண்டுகள் அனைத்தும் குலத்தைச் சேர்ந்த பங்காளிகட்குப்பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
24 மனைத்தெலுங்குச்செட்டியார்களின் குலதெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களே ஆகும். பெண் குலதெய்வங்களை வழிபடும் சமூக அமைப்பில் தாய்வழி அமைப்பு முறைதான் நிலைபெற்றிருக்கும் எனும் வரலாற்று உண்மை இவ்வினத்திற்கும் பொருந்தி வருவதை அறியமுடிகிறது. பெண் குலதெய்வங்கள் நிலைபெற்றுள்ள சமூக அமைப்பு வேளாண்மையோடு தொடர்புடையது என்பது மற்றொரு வரலாற்றுண்மையாகும். இதன்படி இவ்வினமக்கள் வேளாண் மையோடு தொடர்புடையவர்கள் என்பது அறிய முடிகிறது. வேளாண்மையோடு தொடர்புடைய பல சமூகக் குழுக்கள் காலப்போக்கில் வேறு தொழில்கட்க மாறியதுபோல இவ்வின மக்களும் வணிகத்திற்கு மாறியுள்ளனர் என்பது புலனாகிறது.
24 மனைத் தெலுங்குச் செட்டியார்களின் குல தெய்வ வழிபாட்டை ஆராய்வதன் மூலம் இவ்வின மக்களுடைய சமூகப்பண் பாட்டினை அறிந்து கொள்ள முடிகின்றது. பல்வேறு சமூகப் பண்பாட்டு குழுக்குளுடைய திரட்சியே இந்தியப் பண்பாடாகும்.
- முனைவர் துரை அங்குசாமி , செய்தி மற்றும் தகவல் தொடர்பு செயலாளர் - தலைமை சங்கம் , ஆசிரியர் - குலமுரசு - சமுதாய மாத இதழ் .. அவர்களின் " 24 மனையாரின் குலதெய்வ வழிபாடு" ஆராய்ச்சி கட்டுரையின் தொகுப்புரையின் சுருக்கம் .