வரலாறு 

சங்ககாலம் முதல் தமிழகத்திற்கும் ஆந்திரம் மற்றும் கர்னாடகத்திற்கும் இடையில் வணிகப் போக்குவரத்து இருந்து வந்துள்ளது. வணிகத்திற்காகத் தெலுங்கு வணிகர்கள் சங்காலத்தி லிருந்தே தமிழகத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர் என்பதைக் கல்வெட்டு அகழ்வுச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ் வணிகர்கள் வடுகதேயம் சென்று வணிகம் செய்ததைக் கனேறி, நெல்லூர் முதலான இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். விஜயநகரமன்னர்கள் 14 ஆம் நூற்றாண்டியல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த போது படைகட்கு உதவிசெய்யப் பல்வேறு தொழில் பிரிவினரையும் உடன் அழைத்து வந்தனர். அவர்களுடன் வணிகத்திற்காக வந்த வளஞ்சியர்களின் ஒரு பிரிவினர். 24 மனைத்தெலுங்குச்செட்டியார்கள் ஆவர். படை முகாம்களில் பெரிய வணிகமையங்கள் இருந்தன. வணிகத் தொழில் நடைபெற்றுள்ளது. வணிகர்களுக்குப் படை வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப் பட்டிருந்தது. வெற்றிக்குப்பிறகு படைகள் மன்னேறிச் செல்லுகையில் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் கைப்பற்றிய பகுதிகளை ஒப்படைத்துச் செல்லுவது வழக்கமாக இருந்தது. அதன் படி வணிக வீரர்களாகத் திகழ்ந்த இவர்கட்குச் சில பகுதிகளை ஆளும் வாய்ப்பு கிடைத்ததால் "தேசாதிபதிகள்" என அழைக்கப் பெற்றனர். இடங்கை, வலங்கை என்ற இருபிரிவுகளில் இருந்ததும் ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதிகள் இருந்ததும் வரலாற்று உண்மை. இதில் 24 மனைத்தெலுங்குச் செட்டியார்களின் இடங்கைப் பிரிவினைச் சார்ந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. தட்சிணபதம், காஞ்சி பருகச்சப் பெருவழி ஆகிய நெடுஞ்சாலைகள் வழியாக விஜயநகரப் படைகள் தமிழகத்திற்கு வந்தன. இந்தப் பெருவழிகளில் அமைந்துள்ள முக்கிய நகரமான கரூரைச் சுற்றி அமைந்துள்ள இவ்வினத்தவரின் குலதெய்வக் கதைகள் இவர்கள் வந்த இந்த வழித் தடத்தை உறுதிப் படுத்துகின்றன.