குலம்

குலம் எனும் சொல்லுக்கு ஒரு குலையில் இருந்து கிளைத்து வந்தவர்கள் என்பது பொருள். குலம் எனும் சொல்லாட்சி பல இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. இவ்வினத்தில் 24 குலங்கள் உண்டு. பல்லடம் செப்பேடு 24 குலங்களின் பெயர்களையும் கூறும் சான்றாதாரமாகத் திகழ்கின்றது.24 மனைத்தெலுங்குச்செட்டியார்கள் தந்தை வழிமரபு எனும் ஒரு வழிமரபு சார்ந்த ஒரு மூதாதையர் வழிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வினத்தில் சொத்துரிமை செட்டுமை, பூசாரி, பெரியதனம், கோயில்தலைவர், போன்ற பதவிகள் மரபுவழியாக ஆண் வாரிசுகட்கே உண்டு. மணவழிக்குடும்பத்தில் தொடங்கி வளர்குடும்பமாக விரிவு பெற்று, தந்தை வழி மரபில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் எனும் நேர்கோட்டில், மரபுரிமையில் பெருகி நிற்பதே குலமாகும். ஒரு குலத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அவர்கள் ஒரு மூதாதையர் வழி வந்தவர்கள் என்பதும் பொருளாகிறது. திருமணமானவர்களைத் தலைக்கட்டு என்று அழைக்கின்றனர். `தலைக்கட்டுவரி` செலுத்துவது குலமக்களின் தலையாய கடமை எனக்கருதப் படுகிறது. தலைக்கட்டுவரி மூலம் வரும் வருவாயி லிருந்துதான் குலதெய்வக்கோயிலுக்கான ஓராண்டுச் செலவினங்கள் சந்திக்கப்படுகின்றன. `தலைக்கட்டுவரி` செலுத்துவது பற்றிய செய்தி பல்லடம் செப்பேடு மூலம் அறிய முடிகின்றது.