குடும்பம்
குடும்பம் என்பது அடிப்படை அலகு. இது அனைத்துச் சமுதாயங்களிலும் காணப்படுகின்ற நிறுவனமாகும். குடும்பமானது பாலியல், இனப்பெருக்கம், பொருளாதாரம், கல்வி, ஆகிய நான்கு முதன்மையான பணிகளைச் செய்கின்றது.குடும்பமானது இரு நிலைகளில் உள்ளது. மணமக்கள் மணவாழ்வு கொள்ளும் நிலையில் தொடங்கும் இதற்கு மணவழிக்குடும்பம் என்றும் அவர்களின் சந்ததியினர் பல்கிப் பெருகிய நிலையில் உள்ளது. வளர்குடும்பம் எனவும் அழைக்கப்படுகிறது. 24 மனைத்தெலுங்குச் செட்டியார்களின் குடும்ப அமைப்பு வளர்குடும்பமாக விரிந்து பரந்துள்ளது. குடும்பங்களின் துணைகொண்டு வளரும் உறவுப் பிணைப்பானது அந்தந்த சமுதாய முறைக்கு எற்ப அமைகின்றன.
மண உறவு
இவ்வினத்தவரின் மண உறவுகள் `புறமணம் சார்ந்தவை. 24 குலங்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவில் 16 குலங்கள் அணிவகுக்கின்றன. மறுபிரிவில் 8 குலங்கள் அணிவகுக்கின்றன. ஒரே பிரிவுக்குள் திருமணங்கள் நிகழ்வதில்லை. இரு பிரிவுக்கும் இடையேதான் மண உறவுகள் நடைபெறுகின்றன. இநத் மண நெறியிலிருந்து பெரும்பாலும் பிறழ்ச்சி நிகழ்வதில்லை. மண உறவுகள் குல அடிப்படையில் நிகழ்கின்றன. சில குலங்களுடன் மண உறவுகொள்ளுவது சில குலத்தினருக்கு ராசி என்றும் சில குலத்தினருக்கு ராசியில்லை என்றும் பெரிதும் நம்புகின்றனர். குலராசி பற்றிய நம்பிக்கை இவ்வின மக்களிடையே நிறைந்திருக்கிறது. மண உறவுகளை நிர்ணயிக்கும் கருவியாகக் `குலம்` செயல்படுகிறது.