குல திருவிழாக்கள்

தமிழர் திருநாளான பொங்கல் நாளில் குடும்பத்தலைவர், குடும்பத்தலைவி, குலதெய்வம் ஆகிய முவருக்கும் மூன்று பொங்கல்கள் வைப்பது இவ்வினத்தின் தனிச்சிறப்பாகும். குலதெய்வப்பொங்கல் புற்றுக்கண் வழிபாடு இவ்வினத்தின் தனித்தன்மையாகும். திருமண நிகழ்வுக்குப் பிறகு மணப்பெண் வைக்கும் முதற்பொங்கல் குலதெய்வக் கோயிலில் தான் எனும் மரபு வழுவின்றிப் பின்பற்றப்படுகிறது. குலதெய்வத்தின் சீற்றத்தைத் தணிப்பதற்காகவும், நேர்த்திக்கடனுக்காகவும் தெய்வத்தைத் திருப்திப்படுத்து வதற்காகவும், குலதெய்வக்கோயில்களில் உள்ள காவல் தெய்வத்திற்குப் பலியிடப்படுகின்றன. அங்காளம்மன் வழிபாட்டில் பண்டைய கொற்றவை வழிபாட்டின் கூறுகள் இடம் பெறுகின்றன. இவ்வாறு இவ்விழாவில் கலந்து கொள்ளுவதால் நிகழும் உறவினர் சந்திப்பு, கூட்டு உறவில் நெகிழ்ச்சியின்மையையும் கூடி மகிழும் குழு மனப்பான்மையை உருவாக்குகின்றது. குலதெய்வ விழாக்கள் மணப்பெண் மணமகளைத்தேர்வு செய்யும் களங்களாக அமைகின்றன. குலதெய்வக் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா, புரட்டாசிச்சனிக்கிழமை, கார்த்திகை விளக்கீட்டு விழா, மகா சிவராத்திரி விழா முதலியவை குலமக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் விழாக்களாகும்.


நீத்தார் வழிபாடு

இவ்வினத்தில் ஒருவர் இறந்து விட்டால் உயிர் நீத்தவுடன் அவருக்குச் செய்யும் பூசை, இறந்தவரது குலத்தைச் சேர்ந்த பங்காளியால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிற பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.  இறப்புக் காரணமாக ஏற்படும் தீட்டினால் 6 மாதம் வரை குலதெய்வக் கோயிலுக்கு அக்குடும்பத்தினர் செல்லுவதில்லை. இறப்பு வீட்டில் நடக்கும் கருமாதிச் சடங்கின்போது இறந்தவரது வாரிசுகட்கு, உரிமைக்கட்டுச் சீருக்காக, அவரது மாமன், மச்சான் உறவுக்காரர்களால் வழங்கப்படும். வேட்டி துண்டுகள் அனைத்தும் குலத்தைச் சேர்ந்த பங்காளிகட்குப்பிரித்துக் கொடுக்கப்படுகிறது.